Sunday, July 30, 2006

நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமே

நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமே………..

இப்படித்தான் ஆரம்பித்தது என் அரசியல் வாழ்க்கை. ( நான் அரசியல் வாதியென்று நினைத்து விடாதீர்கள்). ஆர்.எஸ்.எஸ் என்பது சாதி, அரசியலுக்கு அப்பாற்பட்ட, சமூக சேவை இயக்கம் என 11-ஆம் வயதில் நான் உணர்த்தப்பட்டதால், தினசரி சாகாவுக்கும் எனது 18-ம் வயதுவரை சென்றேன். எனது 11 – ஆம் வயதிலிருந்து 20-ஆம் வயது வரை நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனாகத்தான் இருந்தேன்.

எனது 14-ம் வயதிலும், 15-ம் வயதிலும் நான் எனது ஊரிலிருந்து நான்கு மைல் தொலைவிலிருந்த ஒரு கிறித்தவப்பள்ளியில் படித்தேன். இந்த காலகட்டத்தில் நான் எவ்வித காரணமுமில்லாமல் கிறித்தவமதத்தை வெறுக்கத் தொடங்கியிருந்தேன். இலவசமாக வழங்கப்படும் பைபிளை தும்பு தும்பாக கிழித்தெரிவது எனக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. இருப்பினும் அந்தப் பள்ளியில் வேலை பார்த்த எனது சொக்காரரான அருணாசல ஆசிரியரை விட ஏனோ, அருள் ஜோசப் ஆசிரியரையும், ராஜாமணி ஆசிரியரையும், சூசை அற்புதம் ஆசிரியரையும், தமிழாசிரியையாக இருந்த ஒரு பெயர் தெரியாத சிஸ்டரையும், குரூஸ் மைக்கேல் ஆசிரியரையும் எனக்குப் பிடித்திருந்தது. இந்த கிறித்தவ ஆசிரியர்களைவிட ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எனக்கு அந்நியர்களாகவே பட்டார்கள்.


எனது 16-ம் வயதிலிருந்து 18-ம் வயதுவரை எனது ஊருக்கு அருகிலிருந்த ஒரு அரசுப்பள்ளியில் படித்தேன்.


எனது 16-ம் வயதில் தி.மு.க என்னை ஈர்த்தது.

நான் கையில் ராக்கி கட்டியிருந்தது தி.மு.க காரர்களுக்கு பிடிக்கவில்லை. தி.மு.கவை ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த இரண்டுமே பரம்பரை பரம்பரையாக காங்கிரசிலிருந்த எனது சொந்தக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. சொந்தக்காரனாக இருந்தாலும், தி.மு.க காரனாயிருந்தால், ஒரு காலத்தில் அவன் வீட்டு கல்யாணத்துக்கு கூட போகமாட்டார்களாம். தி.மு.க என்னை ஈர்த்த போது அந்நிலை கொஞ்சம் மாறியிருந்தது. எனினும் தி.மு.க காரன் மீது எனது சொந்தக்காரர்களுக்கு ஒரு வெறுப்பு இருக்கத்தான் செய்தது.

எனது 16-ம் வயதிலிருந்து 18-ம் வயதுவரை எனது ஊருக்கு அருகிலிருந்த ஒரு அரசுப்பள்ளியில் படித்தேன் இந்த காலகட்டத்தில் நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்தாலும், தி.மு.க பக்கம் அதிகமாக ஈர்க்கப் பட்டிருந்தேன். பார்ப்பனீயத்தை ஏனோ வெறுக்கத் தொடங்கியிருந்தேன். எனக்கு ஆவுடையப்பன் ஆசிரியரையும், கணேசன் ஆசிரியரையும் பிடிக்கும், இவர்கள் என்ன சாதியென்று எனக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் பார்ப்பனர்கள் அல்ல என்ற அளவுக்குத்தெரியும். பார்ப்பனீயத்தை நான் வெறுக்கத் தொடங்கியிருந்த இந்த கால கட்டத்தில் பார்ப்பனரல்லாத ஆவுடையப்பன் ஆசிரியரையும், கணேசன் ஆசிரியரையும்விட, பார்ப்பனரான மகாதேவன் ஆசிரியரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நான் எனது 19-ஆம் வயதில் படிப்பதற்காக சென்னை வந்தேன், அப்போது நான் தி.மு.க வுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். விடைதேடும் பொருட்டு பெரியார் திடலுக்கு சென்ற எனக்கு சில விடைகள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது, அதில் ஒன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு, பார்ப்பனர்கள் அதிலும் சித்பவன் பார்ப்பனர்கள் என்ற ஒரு பிரிவினர் மட்டுமே தலைவராக வரமுடியும் என்பது. இது ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து என்னை அந்நியப்படுத்தியது. விடைதேட , விடைதேட அது என்னை பெரியாரிடம் ஈர்த்தது.

எனினும் “ பிறவியிலேயே குறை இருந்தாலொழிய வேம்பு இனிக்காது” என பெரியார் சொன்னதை வாசித்தபோது, வேப்பம் பழம் இனிக்குமே என்ற எண்ணம் தான் எனக்கு வந்தது. இருப்பினும் பெரும்பான்மை வேம்பு, கசக்கத்தான் செய்கிறது.

குறிப்பு:

//நீண்ட நாளாக எனக்கு ஒரு சந்தேகம்....உங்க கொள்கை என்ன ?

சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்..உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றாக விளக்கவும் அனுமதி உண்டு..

1. பார்ப்பனீயத்தை எதிர்ப்பது..
2. எல்லா பார்ப்பனரையும் எதிர்ப்பது..
3. சாதி உயர்வு சொல்லும் பார்ப்பனரை எதிர்ப்பது..
4. பார்ப்பனர் சாதியில் நன்பர்களை கொண்டுள்ளவர் எல்லாரையும் எதிர்ப்பது...
5. எல்லாம் சரி...//

செந்தழல் ரவியால், விடாதுகறுப்பிடம் கேட்கப்பட்ட மேற்கண்ட கேள்வி என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது.

வேண்டுகோள்: எழுத்துப் பிழைகளை தமிழ் ஆர்வலர்கள் மன்னிப்பார்களாக. பிழைதிருத்துபவர் ( என் மனைவி தானுங்க ) இப்போ ஊரில் இல்லை. அவர் வந்தவுடன் பிழைகள் கண்டிப்பாக திருத்தப்படும்.


பிழைகள் 23.9.2011 அன்று திருத்தப்பட்டன.

Thursday, July 20, 2006

வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது கேவலமான செயல் இல்லையா?

1. எய்ம்ஸ் மருத்துவ வளாகத்திற்குள் போராட்டம் நடத்த தடை இருந்தும், அதை அனுமதித்தது எந்த விதத்தில் நியாயம்.

2. அரசு கட்டிடத்தையும், மின்சாரத்தையும் ஒரு பிரிவு மக்களுக்கு எதிரான போராட்டத்துக்கு அனுமதித்தது எப்படி.

3.நடவடிக்கை இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை இல்லை என்றுதானே பொருள். வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் கொடுக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

4. சம்பளமில்லா விடுப்பில் சென்றவருக்கு சம்பளம் பிடித்தம் செய்வதும் ஒழுங்கு நடவடிக்கையாகுமா?

5. நடவடிக்கை எடுக்க சொல்லி அரசை வற்புறுத்துவதுதானே, நீதிமன்றங்களின் கடமை. நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று அரசிடம் உறுதிமொழி வாங்குவது, அல்லது அரசு இவ்வாறு உறுதிமொழி கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.

5. இட ஒதுக்கீடு பிரச்சினை அல்லாமல், வேறு பிரச்சினைக்கான போராட்டங்களுக்கும், அரசிடமிருந்து இது போன்ற உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்படுமா?

6. வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் நடத்தினால், போராட்ட காலத்திற்கு, தினப்படி கோரலாமா?

7. முடியாது என்றால், பணக்கார, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறு நீதியா?

8. வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது பிச்சை எடுப்பதிலும் கேவலமான செயல் இல்லையா?

9. இந்த பாமரனின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

10. இவையெல்லாம், இல்லை என்ற ஒன்று இன்னும் இருக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது.

11. சமத்துவம் மலர இட ஒதுக்கீடு மிக மிக அவசியம் என்பதை, இத்தகைய நிகழ்வுகள் உணர்த்தவில்லையா?

Thursday, July 13, 2006

பல்கலைக் கழக ஆசிரியர் பணியில் 100% இட ஒதுக்கீடு

இளநிலை உதவியாளர் பதவிகள் கூட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்து தேர்வு நடத்தி நிரப்பப்படும் போது, பல்கலைக் கழக ஆசிரியர் பதவிகளுக்கு எவ்வித எழுத்து தேர்வும் இல்லை என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இப்பதவிகளில் 100 % இடங்களும் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழக துணை வேந்தர் , அல்லது கல்வி அமைச்சரைத் தெரிந்தவருக்கே ஒதுக்கப் படுவதாக கேள்விப் படுகிறேன்.

அப்படியென்றால் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அனைவரும் துணை வேந்தர் , அல்லது கல்வி அமைச்சரைத் தெரிந்தவர்களா? என விவரம் கெட்ட கேள்வி ஒன்றை கேட்டேன்.

போதுமான அளவு காசு இருந்தால் இவர்களுக்கு தெரிந்தவர்களாகிவிடலாம் என விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?

Thursday, July 06, 2006

வீண்டும் சில வீட்டு கார்யங்கள்

என்னதான் திருட்டு VCD பார்ப்பதில் வசதியாக இருந்தாலும், தியேட்டருக்குப்போய் படம் பார்ப்பதில் இருக்கும் சுகமே தனி!!!

திருட்டு VCD கள் பெருகுவதற்கு தியேட்டர்களின் மோசமான தரமும் ஒருகாரணம்.

கேரளத்தில் தியேட்டர்களை ஓரளவு நல்ல முறையில் பராமரிக்கிரார்கள்.

நான் கேரள மாநிலம், காஞ்சிரப்பள்ளியில் பணிபுரிந்தபோது ஓபரா தியேட்டரில் ஓடிய அத்தனை மலயாளபடமும் பார்த்திருக்கிறேன்.

அங்கு கடைசியாக நான் பார்த்த படம் ' வீண்டும் சில வீட்டு கார்யங்கள்' . அதை பார்த்தபோது ஒரு கட்டத்தில் நான் அழுதேன்.

சமீபத்தில் அதே படத்தை asiyanet ல் மனைவியுடன் சேர்ந்து பார்த்தேன். அதே கட்டத்தில் மீண்டும் அழுதேன். திரும்பிப் பார்த்தேன் , என் மனைவியும் அழுதுகொண்டிருந்தாள்.

யாரேனும் அந்த படம் பார்க்கும் போது அழுதிருந்தால் எந்த கட்டத்தில் அழுதீர்கள் என்று சொல்லுங்கள்.

பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Tuesday, July 04, 2006

மனிதம்.

நான் எங்கோ படித்து எனது நாட்குறிப்பில் குறித்து வைத்த ஆங்கில கவிதையை என்னால் இயன்ற அளவு தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். கவிஞரின் பெயரை குறித்து வைக்காததற்கு வருத்தப்படுகிறேன்.

நான் எங்கிருந்து வருகிறேன் எனக்கேட்காதே.
எங்கே செல்கிறேனென்றும் கேட்காதே.

எனது உடையின் தரத்தைக் கொண்டோ…
எனது முடியின் நிறத்தைக் கொண்டோ…
என்னைக் கணித்துவிடாதே.

எனது முகத்தின் வடிவைக்கொண்டோ…
அதில் வடியா கருணை கொண்டோ…
என்னை எடைபோட்டு விடாதே.


காலப் போக்கில்
நான் ஏழையாகலாம் இல்லை செல்வனாகலாம்.
வீரனாகலாம் இல்லை கோழையாகலாம்.

உன்னைச் சுற்றியுள்ள குறுகிய வட்டத்தைக் கடந்து
நீ என்னைக் கூர்ந்து பார்த்தால்
உன்னில் சிலதை என்னிலும் என்னில் சிலதை உன்னிலும் காண்பாய்.

வலி வந்தால் நீயும்தான் என்னைப்போல் அழுகிறாய்.
இன்பத்தில் நானும்தான் உன்னைப்போல் நகைக்கிறேன்.

அடிப்படையில் நீயும் நானும் ஒன்றுதான்.

ஏதோ ஒன்று நமக்குள் பொதுவாய் இருக்கிறது.

மனிதமாயிருக்குமோ?

Sunday, July 02, 2006

7 லட்சம் பேர் உலகைக் காண.........

இந்தியாவில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் கார்னியா என்னும் விழி வெண்படலம் ஏதாவதொரு காரணத்தால் பாதிக்கப்பட்டதால் பார்வையற்றோர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் மேலும் 30 ஆயிரம் பேர் சேர்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வெறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்து பயன் பெறுகிறார்கள்.

மற்றவர்கள் இந்த இரண்டு மணி நேர சிகிச்சைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.

ஏன் இவர்கள் காத்திருக்கிறார்கள்?

போதுமான அளவுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள்.
பல மருத்துவ மனைகளில் இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது.

இருந்தும் என்ன பயன்? கார்னியா வேண்டுமே!

7 லட்சம் பேர் கார்னியாவிற்காக வருடக்கணக்கில் காத்திருக்க, ஆண்டொன்றிற்கு 160 லட்சம் கார்னியாக்கள் புதைக்கப் படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன என்ற புள்ளி விவரம் அதிர்ச்சியளிக்கிறது.

ஆம், கடையில் வாங்க முடியாத, விலைமதிப்பில்லாத இரண்டு மனிதனுக்கு பார்வை கொடுக்கும் சக்தியுள்ள இரண்டு கார்னியாக்கள் ஒவ்வொரு மரணத்தின் போதும் புதைக்கப் படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட இந்தியாவில் ஆண்டொன்றிற்கு 80 லட்சம் பேர் இறக்கிறார்கள். இவர்களில் ஒரு சிறிய சதவீதம் பேர் மட்டும் விழிக்கொடை கொடுத்தால் போதும், காத்திருக்கும் 7 லட்சம் விழிகள் சில ஆண்டுகளிலேயே பார்வை பெறும். வரும் ஆண்டுகளில் கார்னியா பாதிக்கப்பட்ட எவரும் ஒருநாள் கூட பார்வை இன்றி தவிக்கவேண்டாம்.