Sunday, July 30, 2006

நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமே

நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமே………..

இப்படித்தான் ஆரம்பித்தது என் அரசியல் வாழ்க்கை. ( நான் அரசியல் வாதியென்று நினைத்து விடாதீர்கள்). ஆர்.எஸ்.எஸ் என்பது சாதி, அரசியலுக்கு அப்பாற்பட்ட, சமூக சேவை இயக்கம் என 11-ஆம் வயதில் நான் உணர்த்தப்பட்டதால், தினசரி சாகாவுக்கும் எனது 18-ம் வயதுவரை சென்றேன். எனது 11 – ஆம் வயதிலிருந்து 20-ஆம் வயது வரை நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனாகத்தான் இருந்தேன்.

எனது 14-ம் வயதிலும், 15-ம் வயதிலும் நான் எனது ஊரிலிருந்து நான்கு மைல் தொலைவிலிருந்த ஒரு கிறித்தவப்பள்ளியில் படித்தேன். இந்த காலகட்டத்தில் நான் எவ்வித காரணமுமில்லாமல் கிறித்தவமதத்தை வெறுக்கத் தொடங்கியிருந்தேன். இலவசமாக வழங்கப்படும் பைபிளை தும்பு தும்பாக கிழித்தெரிவது எனக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. இருப்பினும் அந்தப் பள்ளியில் வேலை பார்த்த எனது சொக்காரரான அருணாசல ஆசிரியரை விட ஏனோ, அருள் ஜோசப் ஆசிரியரையும், ராஜாமணி ஆசிரியரையும், சூசை அற்புதம் ஆசிரியரையும், தமிழாசிரியையாக இருந்த ஒரு பெயர் தெரியாத சிஸ்டரையும், குரூஸ் மைக்கேல் ஆசிரியரையும் எனக்குப் பிடித்திருந்தது. இந்த கிறித்தவ ஆசிரியர்களைவிட ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எனக்கு அந்நியர்களாகவே பட்டார்கள்.


எனது 16-ம் வயதிலிருந்து 18-ம் வயதுவரை எனது ஊருக்கு அருகிலிருந்த ஒரு அரசுப்பள்ளியில் படித்தேன்.


எனது 16-ம் வயதில் தி.மு.க என்னை ஈர்த்தது.

நான் கையில் ராக்கி கட்டியிருந்தது தி.மு.க காரர்களுக்கு பிடிக்கவில்லை. தி.மு.கவை ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த இரண்டுமே பரம்பரை பரம்பரையாக காங்கிரசிலிருந்த எனது சொந்தக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. சொந்தக்காரனாக இருந்தாலும், தி.மு.க காரனாயிருந்தால், ஒரு காலத்தில் அவன் வீட்டு கல்யாணத்துக்கு கூட போகமாட்டார்களாம். தி.மு.க என்னை ஈர்த்த போது அந்நிலை கொஞ்சம் மாறியிருந்தது. எனினும் தி.மு.க காரன் மீது எனது சொந்தக்காரர்களுக்கு ஒரு வெறுப்பு இருக்கத்தான் செய்தது.

எனது 16-ம் வயதிலிருந்து 18-ம் வயதுவரை எனது ஊருக்கு அருகிலிருந்த ஒரு அரசுப்பள்ளியில் படித்தேன் இந்த காலகட்டத்தில் நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்தாலும், தி.மு.க பக்கம் அதிகமாக ஈர்க்கப் பட்டிருந்தேன். பார்ப்பனீயத்தை ஏனோ வெறுக்கத் தொடங்கியிருந்தேன். எனக்கு ஆவுடையப்பன் ஆசிரியரையும், கணேசன் ஆசிரியரையும் பிடிக்கும், இவர்கள் என்ன சாதியென்று எனக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் பார்ப்பனர்கள் அல்ல என்ற அளவுக்குத்தெரியும். பார்ப்பனீயத்தை நான் வெறுக்கத் தொடங்கியிருந்த இந்த கால கட்டத்தில் பார்ப்பனரல்லாத ஆவுடையப்பன் ஆசிரியரையும், கணேசன் ஆசிரியரையும்விட, பார்ப்பனரான மகாதேவன் ஆசிரியரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நான் எனது 19-ஆம் வயதில் படிப்பதற்காக சென்னை வந்தேன், அப்போது நான் தி.மு.க வுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். விடைதேடும் பொருட்டு பெரியார் திடலுக்கு சென்ற எனக்கு சில விடைகள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது, அதில் ஒன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு, பார்ப்பனர்கள் அதிலும் சித்பவன் பார்ப்பனர்கள் என்ற ஒரு பிரிவினர் மட்டுமே தலைவராக வரமுடியும் என்பது. இது ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து என்னை அந்நியப்படுத்தியது. விடைதேட , விடைதேட அது என்னை பெரியாரிடம் ஈர்த்தது.

எனினும் “ பிறவியிலேயே குறை இருந்தாலொழிய வேம்பு இனிக்காது” என பெரியார் சொன்னதை வாசித்தபோது, வேப்பம் பழம் இனிக்குமே என்ற எண்ணம் தான் எனக்கு வந்தது. இருப்பினும் பெரும்பான்மை வேம்பு, கசக்கத்தான் செய்கிறது.

குறிப்பு:

//நீண்ட நாளாக எனக்கு ஒரு சந்தேகம்....உங்க கொள்கை என்ன ?

சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்..உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றாக விளக்கவும் அனுமதி உண்டு..

1. பார்ப்பனீயத்தை எதிர்ப்பது..
2. எல்லா பார்ப்பனரையும் எதிர்ப்பது..
3. சாதி உயர்வு சொல்லும் பார்ப்பனரை எதிர்ப்பது..
4. பார்ப்பனர் சாதியில் நன்பர்களை கொண்டுள்ளவர் எல்லாரையும் எதிர்ப்பது...
5. எல்லாம் சரி...//

செந்தழல் ரவியால், விடாதுகறுப்பிடம் கேட்கப்பட்ட மேற்கண்ட கேள்வி என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது.

வேண்டுகோள்: எழுத்துப் பிழைகளை தமிழ் ஆர்வலர்கள் மன்னிப்பார்களாக. பிழைதிருத்துபவர் ( என் மனைவி தானுங்க ) இப்போ ஊரில் இல்லை. அவர் வந்தவுடன் பிழைகள் கண்டிப்பாக திருத்தப்படும்.


பிழைகள் 23.9.2011 அன்று திருத்தப்பட்டன.

5 Comments:

Blogger பாரதிய நவீன இளவரசன் said...

//3. சாதி உயர்வு சொல்லும் பார்ப்பனரை எதிர்ப்பது..//

இதைத் தவிர மற்றவை ஏற்றுக்கொள்ளக் கூடிய கொள்கையாகத் தெரியவில்லை.

5:37 AM, September 21, 2006  
Blogger பொன்ஸ்~~Poorna said...

பிழைகள் எல்லாம் இன்னுமா திருத்தலை? :)

1:22 AM, October 03, 2006  
Blogger தருமி said...

பதிவுக்கு வெளியில் ஒரு கேள்வி: பாவூர் ...அது எந்த பாவூர்?

9:31 AM, February 12, 2007  
Blogger ஜடாயு said...

// அதில் ஒன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு, பார்ப்பனர்கள் அதிலும் சித்பவன் பார்ப்பனர்கள் என்ற ஒரு பிரிவினர் மட்டுமே தலைவராக வரமுடியும் என்பது. இது ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து என்னை அந்நியப்படுத்தியது.//

இது தவறான தகவல். சங்கத்தின் 4வது தலைவர் ராஜேந்திர சிங் (ரஜ்ஜு பையா) டாகுர் சாதியைச் சார்ந்தவர். வன்னியர் போன்று உ.பியில் உள்ள ஒரு சத்திரிய ஜாதி இது. தற்போதைய தலைவர் சுதர்சன் கன்னடத்துக் காரர், எந்த சாதி என்று தெரியவில்லை.

இந்துக்கள் அனைவரும் சகோதரரே
எந்த இந்துவும் இழுந்தவன் அல்ல
இதுவே ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை. மேலும் சந்தேகம் இருந்தால் நண்பர் நீலகண்டன் தெளிவிப்பார்.

9:49 AM, February 12, 2007  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

1:38 PM, April 14, 2010  

Post a Comment

<< Home